Blogger இயக்குவது.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

ஹோம் கார்டன் மணமூட்டிகள்

ஹோம் கார்டன்

உலக மயம், தாராள மயம் என நமது பொருளாதாரம் மாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நமது உணவுப் பழக்கமும் உலக மயம் ஆகியிருப்பதில் வியப்பில்லை. சுவையின் காரணமாக துரித உணவுகள் (Fast Food)  நிறைந்திருப்பதை நாம் காணலாம். அவற்றில் அதிகம் பயன்படும் சில மருத்துவ குணமுடைய ஐரோப்பிய மணமூட்டிகள் பற்றி இங்கு விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். இவற்றை பச்சையாகவும் உலர வைத்து பதப்படுத்தியும் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பது இன்னொரு சிறப்பு. இந்தியாவில் பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் இவை விளைவிக்கப்படுவதாலும் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாலும் விலை சற்று அதிகம். அதோடு, எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. நமது தேவைக்கு வீட்டுத் தோட்டத்தில் சில செடிகளை நாமே வளர்க்கலாமே!

தைரியம் தரும் தைம்

தொட்டியில் வளர்ப்பதற்கு சிறந்த தாவரம். மிகச்சிறிய இலைகளையும் மெல்லிய தண்டு அமைப்பையும் கொண்ட பழமையான மணமுள்ள தாவரம். மலைப்பாங்கான பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் வளரக்கூடியது. இருப்பினும் மலைப் பகுதிகளில் வளர்பவையே சிறப்பாக உள்ளன. நல்ல வடிகால் வசதி தேவை. விதை, நுனித்தண்டு, மண்பதியம் அல்லது தாய்ச்செடியிலிருந்து வேருடன் பிரித்து இனப்பெருக்கம் செய்யலாம். சளி, இருமல் போன்ற உபாதைகளுக்கு இதன் வடிநீர் (Decoction ) சிறந்தது. வாய் கொப்புளிக்க (Mouth Wash ) உதவும் திரவங்களில் பெரும்பங்கு தைம் எண்ணெயில் செய்யப்படுபவையே. கிரேக்கர், ரோமானியர் காலத்தில் படைத் தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் தைரியம் ஊட்ட, பெண்கள் அவர்களுக்கு இதை வழங்கியதாக வரலாறு உண்டு. எகிப்தியர் தங்கள் ஃபரோ மன்னர்களின் உடல்களை பாடம் (Embalming) செய்து பாதுகாக்க இதனை உபயோகித்துள்ளனர்.

எதிர்ப்பு சக்தி தரும் ரோஸ்மேரி

பொதுவாக இது 900 மீட்டர் உயரத்துக்கு மேலுள்ள பகுதிகளில் நன்கு வளரும் தன்மையுள்ளது. தொட்டிகளிலும் வளர்க்கலாம். மத்தியதரை கடல் நாடுகளை தாயகமாகக் கொண்டது. பல்லாண்டுப் பயிர். வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளது. தண்ணீர் தேங்குதல் கூடாது. நோய்த் தாக்குதல் குறைவு. விரைவான நாற்று உற்பத்திக்கு நுனித்தண்டை உபயோகிக்கலாம். வேர் வளர்ச்சி சற்று கடினம் என்பதால் வளர்ச்சி ஊக்கிகள் தருவது நல்லது. பிரபல உணவகங்களில் அசைவ உணவை தயாரிக்கும் போது இதன் பச்சை இலைகளை பயன்படுத்துவர். இதனால் மணமும் சுவையும் கூடுகிறது. நிழலில் உலர்த்திப் பெறப்படும் இலைகள் தேநீர் தயாரிப்பதில் நல்ல மணமூட்டியாக உள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றன. வயிற்று வலி, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கும் நல்ல மருந்தாகும். இது மூலிகை வாசனை சிகிச்சையிலும் (Aroma Therapy) பயன்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் நறுமண எண்ணெயை உயர் வகை வாசனை திரவியங்களிலும் முக அலங்கார பொருட்களிலும் தலைமுடி தைலம் தயாரிப்பிலும் பெண்கள் அழகு நிலையங்களில் அழகு ஊட்டவும் பயன்படுத்துகின்றனர். இது குறிப்பாக பெண்களுக்கான தாவரம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட வகை ஊட்டி 1 (RM 1) நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதோடு வணிக ரீதியில் அதிக மகசூலையும் தருகிறது. வளர்ப்பு மிருகங்கள் இதனை உண்பதில்லை என்பது வணிக ரீதியாக பயிர் செய்பவர்களுக்கு நல்ல செய்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக