பாரபட்சம்!
தகுதி, திறமை, கடினமாக உழைக்கும் எண்ணம் எல்லாமே சிலரிடம் இருக்கும். ஆனால், பொருத்தமான வேலை கிடைக்காது. அப்படிப்பட்ட ஒருவர் சமந்தா எலாஃப். தலையில் கறுப்புநிற புர்கா அணிந்திருந்த காரணத்தினாலேயே எலாஃபுக்கு வேலை இல்லை என்று திருப்பி அனுப்பியது ஒரு கம்பெனி. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளம்பெண் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, நீதியைப் பெற்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்!
2008ம் வருடம். 17 வயது இஸ்லாமிய பெண் எலாஃப் ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போகிறார். அது ‘மாடல்’ பணிக்கான நேர்முகம். நிறுவனமோ 1892லிருந்து செயல்பட்டு வரும் பழம்பெருமை வாய்ந்த ‘ஏபர்க்ராம்பி - ஃபிட்ச்’. குழந்தைகளுக்கான உடைகளைத் தயாரித்து விற்கும் பிரிவு அது. எலாஃப் தலையில் புர்கா அணிந்திருந்தார்.
அவருடைய அழகு, திறமை எல்லாமே ஈர்க்கும்படி இருந்தாலும், புர்கா உறுத்தலாக இருந்தது. நிறுவனத்தின் ‘டிரெஸ் கோட்’ உடன் அது ஒத்துப் போகவில்லை. அவருக்கு வேலை கொடுப்பதில்லை என முடிவு செய்தது ஏபர்க்ராம்பி நிறுவனம். சட்டத்தின் உதவியை நாடினார் எலாஃப். அவரது சார்பாக அமெரிக்காவின்,‘ஈக்வல் எம்ப்ளாய்மென்ட் ஆப்பர்சூனிட்டி கமிஷன்’ வழக்குத் தொடுத்தது. ‘மதரீதியான நம்பிக்கை, அடையாளத்துக்காக எலாஃப் தலையில் புர்கா அணிந்திருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று ஒரே போடாகப் போட்டது ஏபர்க்ராம்பி நிறுவனம்.
விசாரணையின் போது எலாஃப் இப்படிக் குறிப்பிட்டார்... ‘‘நான் அமெரிக்காவில் பிறந்தேன். அமெரிக்காவில் உள்ள மற்றவர்களைப் போலத்தான் நானும் என்று நம்பினேன். ஏபர்க்ராம்பியில் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அது என் இரண்டாவது வீட்டைப் போல தோன்றியது. ஆனால், என் மத நம்பிக்கைக்காகவே நான் அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்கிறேன்.’’ வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. விசாரித்த உச்ச நீதிமன்றம் எலாஃபுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.
‘வேலைக்குச் சேருவதற்காக விண்ணப்பம் செய்திருக்கும் எலாஃப், தன் மத அடையாளங்களைத் தெரிவிக்கும் உடையை அணிவதற்காக தனிப்பட்ட கோரிக்கை எதையும் நிறுவனத்திடம் தெரிவிக்கத் தேவை இல்லை. ஏபர்க்ராம்பியில் இருப்பவர்களுக்கு எலாஃப் ஓர் இஸ்லாமிய பெண் என்பதும் தன் மத அடையாளத்துக்காகவே அவர் புர்கா அணிந்திருக்கிறார் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்து வேலைக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமியர், சீக்கியர், யூதர் என பல்வேறு சிறுபான்மையின மக்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தாடி, தலைப்பாகை, உடை போன்றவற்றை வைத்து ஒரு நபரை வேலைக்கு சேர்க்காமல் விடுவதும் ஒரு வகையில் பாரபட்சம் பார்ப்பதுதானே!
நன்றி : குங்குமம் தோழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக