Blogger இயக்குவது.

திங்கள், 8 டிசம்பர், 2014

புற்றுநோய் பயம் தேவையில்லை - டாக்டர் சாந்தா

புற்றுநோய் என்ற சொல்லைக் கேட்டதுமே பொதுவாகப் பலருக்கும் பயம்தான் ஏற்படும். இந்த பயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினால் பரவாயில்லை. காரணம், இப்போதிருக்கும் அளவுக்கு அன்று மருத்துவ வசதிகளோ சிகிச்சை முறைகளோ கிடையாது. “இன்றைய சூழலில் புற்றுநோய் குறித்து பயப்படத் தேவையில்லை” என்கிறார் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவருடைய தங்கை 1923-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு என தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முத்துலட்சுமி ரெட்டி முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாகவும் இறங்கினார். ஆனால், புற்றுநோய்க்கு எதற்கு மருத்துவமனை, புற்றுநோய் வந்தால்தான் உயிரிழந்து விடுகிறார்களே என அப்போதைய அரசு உள்பட பலரும் மருத்துவமனை தொடங்க ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் இந்த அறுபது ஆண்டுகளில் பல வியக்கத்தக்க முன்னேற்றங்கள், மாறுதல்கள் ஆகியன புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ளன. குணப்படுத்தவே முடியாது என்ற சூழலில் இருந்து புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலைக்கு இன்றைய மருத்துவம் வளர்ந்துள்ளது. இவ்வளவு ஏன்? புற்றுநோயைத் தடுக்கவும் முடியும். இந்த உண்மை பற்றிய அறியாமையினால்தான் புற்றுநோய் பற்றிய பல தவறான கருத்துகள் நிலவி வருகின்றன.
“புற்றுநோய் என்பது ஒரு தனி நோய் அல்ல. பல விதமான நோய்கள் இதனுள் அடக்கம். அனைத்துப் புற்றுநோய்களும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒன்றுக்கொன்று வேறுபாடு உண்டு. இதன் தாக்கத்தின் வெளிப்பாடும் ஒரே மாதிரி இருக்காது” என்று சொல்லும் டாக்டர் சாந்தா, புற்றுநோய் குறித்த அடிப்படை உண்மைகளைக் கூறினார்.
“புற்றுநோய் ஒரு பகுதியை மட்டும் பாதிக்கும் நோய் இல்லை. மனித உடலிலுள்ள செல்கள் சம்பந்தப்பட்டது. எவ்வாறு பலதரப்பட்ட நோய்கள் மனித உடலின் பல பாகங்களில் தோன்றுகிறதோ அதேபோல்தான் புற்றுநோயும்.
கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு புற்றுநோயின் தன்மையும் குணப்படுத்தும் முறையும் வெவ்வேறாக இருக்கும்.
கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனங்கள் தற்போது உள்ளன. ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டுபிடித்தால் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது” என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் சாந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக