Blogger இயக்குவது.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

எச்சரிக்கை


குள்ளமாக இருப்பவர்கள் தங்களை சற்று உயரமாக காட்டுவதற்கு ஹை ஹீல்ஸ் பயன்பட்டது அந்தக் காலம். இன்றோ, நடன மங்கையோ, நாகரிக மங்கையோ ஹை ஹீல்ஸ் அணிந்து ஒய்யாரமாக உலா வருவதுதான் டிரெண்ட். நாகரிகத்தின் சின்னமாகிவிட்ட ஹை ஹீல்ஸ், கேட்வாக் மாடல்கள் தொடங்கி கல்லூரி மாணவிகள் வரை பிரபலமோ பிரபலம்! 
அழகுக்காகவும் ஸ்டைலுக்காகவும் பெண்கள் பயன்படுத்தும் இவ்வகை செருப்புகள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கால முதுகுவலி முதல் ஆளையே முடக்கிப் போடும் மூட்டுவலி வரை வருவதற்கு ஹீல்ஸ் காலணிகள் காரணமாக அமைகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். ஹை ஹீல்ஸ் உருவான வரலாற்றில் தொடங்கி, அதனால் ஏற்படும் பிரச்னைகள் வரை விவரிக்கிறார் எலும்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கோபி மனோகர்...



‘‘ஹை ஹீல்ஸை முதன்முதலாக பயன்படுத்தியது ஆண்களே!




16ம் நூற்றாண்டில் பெர்சிய போர்வீரர்கள், குதிரையில் அமர்ந்தபடியே வில்லில் இருந்து அம்புகளை எய்துவதற்கு வசதியாக, குதிரையின் கடிவாளத்தில் ஹீல்ஸ் காலணிகளை பொருத்திக் கொண்டனர். ஐரோப்பிய நாடுகளை அவர்கள் பிடித்த போது அங்கும் மெல்ல பரவியது ஹை ஹீல்ஸ் வழக்கம். பிரான்ஸ் நாட்டின் ‘கேத்தரின் டே மெடிசி’ என்பவரே  முதன்முதலாக ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்மணி. அவர் பிரான்ஸ் அதிபரை மணந்து கொண்டார். அப்போது அவருக்கு 14 வயது தான். அதிபரின் உயரத்துக்கு நிகராக தன்னைக் காட்டிக்கொள்ள ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டார். அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் பணக்காரப் பெண்கள் பெருமைக்குரிய அடையாளமாக கருதி இதனைப் பயன்படுத்தினர். 
பின்னர், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஃபேஷன் ஷோக்களில் மாடல்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். ‘உலக அழகி’களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவிலும் பரவியது. உயரம் குறைவான நடிகைகள், கதாநாயகர்களின் உயரத்துக்கு ஏற்ப காட்டிக்கொள்ள ஹீல்ஸ் அணிய ஆரம்பித்தார்கள். இப்படித்தான் உலகெங்கிலும் ஹை ஹீல்ஸ் காலணிகளும் ஷூக்களும் பரவ ஆரம்பித்தன.  அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லும் போது ஹை ஹீல்ஸ் அணிந்து செல்லவேண்டும் என்பது விதி. விமானப் பணிப்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணியவேண்டும் என்பது அவர்களின் டிரெஸ் கோட்.‘‘நீண்ட காலமாக ஹை ஹீல்ஸ் பயன்படுத்தி வருபவர்களுக்கு பாதத்துக்கு மேல் உள்ள கரண்டைக்கால் தசைகள் பாதிப்படையும். ‘Calf Muscles’ என்று இதனை குறிப்பிடுவோம். இதில் இறுக்கம் உருவாகி வலி அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னைக்கு ‘அச்சிலஸ் டெண்டினைடிஸ்’ என்று பெயர். ‘ப்ளான்டர் ஃபேசியா’ எனப்படும் தசைநார்தான் கணுக்கால் எலும்பில் இருந்து கால்விரல்கள் வரை இருக்கிறது. இது ஹை ஹீல்ஸ் அணிவதால் தடிமனாகி பாதத்தில் வலி ஏற்பட காரணமாக அமைகிறது. 
ஹை ஹீல்ஸ் அணிந்தால் வேகமாக நடக்கவோ, ஓடவோ முடியாது. மெதுவாகத்தான் நடக்க முடியும். இதனால் மனரீதியாகவே சுறுசுறுப்பு பாதிக்கப்படும். விரல்களை மூடியபடி பாக்ஸ் போன்ற தோற்றத்தில் சில ஹை ஹீல்ஸ் காலணிகளை வடிவமைத்து இருப்பார்கள். இதைத் தொடர்ந்து அணிவதால் பெருவிரலில் அழுத்தம் அதிகமாகி ‘ஹெலஸ் வால்கஸ்’ என்னும் உறுப்புக் குறைபாட்டை உருவாக்கும். பெருவிரலானது மற்ற விரல்களை நோக்கி வளைந்து விடும். மற்ற விரல்களில் அழுத்தம் ஏற்பட்டால் ஹெம்மர் டோ, கிளா டோ, மல்லட் டோ போன்ற விரல் குறைபாடுகளை ஏற்படுத்தும். விரல்களில் வரும் பிரச்னைகளை அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்ய வேண்டியிருக்கும். அதனால், விரல்களில் ஏதேனும் வேறுபாடு தெரிந்தால் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திவிட வேண்டும். 




உயரமாகத் தோற்றமளிக்கச் செய்வதோடு, எடுப்பாகத் தெரியவும் செய்வதால், பெண்கள் அதிக அளவில் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகிறார்கள். ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது முதுகில் ஏற்படும் ஒருவித வளைவால் முன்பக்கமும் பின்பக்கமும் பெண்களுக்கு அழகாகத் தெரியும். இதனாலேயே நடிகைகள் அதிகமாக இதனை பயன்படுத்துகின்றனர்...’’ என ஹை ஹீல்ஸ் பிரபலமான விதம் கூறும் டாக்டர் கோபி மனோகர், அதன் பாதகமான விளைவுகள் குறித்தும் விளக்குகிறார்... 

பாதத்தில் உள்ள கால்கேனியல் எலும்பில் தேய்மானத்தை ஏற்படுத்தி ‘கான்கேனியல் ஸ்பர்’ என்னும்  பிரச்னை வரக் காரணமாகிறது. மேற்சொன்ன இரண்டு பிரச்னைகளிலும் அதிகாலையில்   படுக்கையை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும்.  கவனிக்காது விட்டாலோ, நாட்கள் செல்லச் செல்ல நாள் முழுவதும் வலி துன்பம் தரக் கூடும். 

ஹை ஹீல்ஸ் அணிவதால் நடையில் ஏற்படும் மாற்றத்தால் மூட்டுகளில் அதிக அழுத்தம் உருவாகி தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்னும் மூட்டு எலும்பு தேய்மான நோய் எளிதாக வருவதற்கு வழிவகுக்கிறது. ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். தண்டுவட எலும்புகளில் உள்ள அனுலார் சவ்வு கிழிபட்டு முதுகு வலி பிரச்னையை ஏற்படுத்தும். முதுகுப் பகுதியில் லம்பார் லார்டோசிஸ் வளைவை அதிகப்படுத்தி தண்டுவட எலும்புகளில் L5, S1 பகுதியில் அதிக தேய்மானம் ஏற்படுத்தி வலியை உருவாக்கவும் ஹை ஹீல்ஸ் முக்கிய காரணம்.சிலருக்கு Intervertebdral disc prolapse என்னும் தண்டுவட எலும்புகளின் நடுவே உள்ள தட்டுகள் தேய்மானம் அடைந்து முதுகுவலி ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் மருந்து, மாத்திரைகள், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளை கொடுத்து சரி செய்து விடலாம். பிரச்னை வளர்ந்த நிலையில் வலி குறையாமல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்யவேண்டியிருக்கும். இப்போது பதின்ம வயது பருவப்பெண்களும் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்பழக்கம் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சியை பாதித்து, இளம் வயதிலேயே கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் ஹை ஹீல்ஸ் தேவையா என்று இளம்பெண்கள் யோசிக்க வேண்டும்...’’ என்று எச்சரிக்கிறவர், ஹை ஹீல்ஸ் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார்


  1. பாதங்களில் வலி உள்ளவர்கள் கான்ட்ராஸ்ட் பாத் என்ற சிகிச்சையை வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளைகளும் செய்ய வேண்டும்.
  2. நீண்ட நாட்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து பழகியவர்களால் வழக்கமான செருப்புகளுக்கு உடனே மாற முடியாது. பாதங்களின் கீழ் உள்ள ஆர்ச் எனப்படும் வளைவுகள் மிகவும் குறைந்துவிடும். ஒரு இஞ்ச் அளவுள்ள ஹீல் உள்ள செருப்புகளுக்கு மாறி அதன் பிறகுதான் ஹீல் இல்லாத செருப்புகளுக்கு மாற வேண்டும்.
  3. எந்த வகை செருப்புகள் அல்லது ஷூக்கள் போடவேண்டும் என நிபுணர்களை கலந்தாலோசிப்பது பாதங்களுக்கு நலம் தரும்.
  4. அச்சிலஸ் டெண்டினைடிஸ், ப்ளான்டர் ஃபேசியா, கால்கேனியல் ஸ்பர் போன்ற பிரச்னைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை முறையில் அல்ட்ரா சவுண்ட் கொடுப்பதன் மூலம் வலியை சரி செய்யலாம். அப்படியும் வலி சரியாகவில்லை என்றால் லோக்கல் ஸ்டீராய்டு இன்ஜெக்ஷனை வலி உள்ள இடத்தில் மட்டும் போட்டு சரி செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.